Search

தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?

Sunday 3 February 2019


உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் ஒருவித சராசரி வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான். ஆனால் இந்த சராசரி வாழ்க்கையை மட்டுமே மனிதன் வாழ்வது போதுமானதல்ல. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும். வெற்றிடமாக அமையும் தன் வாழ்க்கையை வெற்றியிடமாக மாற்றி அமைத்துக் கொள்வது பெரும்பாலும் அவரவர் கையிலேயே இருக்கிறது. அதிர்ஷ்டம் விதிப்பயன் என்பதெல்லாம் வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் குறுக்கிட்டதே இல்லை.

பயம் வேண்டாம் 

துணிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி என்ற திரிசூலம் எவர் கையிலிருந்தாலும் அவருக்கு வெற்றி உறுதி. வாழ்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணமாகும். படிப்பு, தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணத்தின் சிறு பகுதியாகும்.


மாணவர்களின் பொதுவான தேர்வுப் பிரச்சினைகள் என்னென்ன? அவற்றிலி ருந்து விடுபட்டு தேர்வை பயமின்றி எதிர் கொண்டு நினைத்தவாறு மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வது எப்படி?

இதோ, இவைதான் மாணவர்களின் பொதுவான பிரச்சினைகள்.

இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி படித்து முடிப்பது?

என்னதான் படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போகிறதே. நினைவில் நிறுத்தி வைப்பது எப்படி?

என்னதான் எழுதினாலும் முழுமையான மதிப்பெண் கிடைப்பதில்லையே ஏன்?

நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?

இவைகளுக்கான தீர்வு என்ன? 

தேர்வில் வெற்றி பெறுவதோ அதிக மதிப்பெண்களைப் பெறுவதோ முதல் மாணவனாக வருவதோ கடினமான ஒரு காரியமல்ல. ஏனெனில் தேர்வு என்பது ஒரு எல்லைக்குள் விளையாடும் விளையாட்டு போன்றது. பாடத்திட்டம் என்ற எல்லைக்குள்தான் எல்லா வினாக்களும் அமைய முடியும். எனவே தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிமையான ஒரு காரியமாகும்.

ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவனது பாடத்திட்டத்தைத்தான். ஒவ்வொரு பாடநூலிலும் எத்தனை பாடங்கள் இருக்கின்றன, என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்பதை ஒரு மாணவன் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாடத்திட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டதும் இருக்கின்ற கால அளவிற் கேற்ப பாடங்களைப் பிரித்துப் படிப்பதற்கு வசதியாக நேரத்தைத் திட்டமிட வேண்டும். இந்த இரண்டையும் செய்து விட்டாலே பாதி வெற்றி கிட்டியது போலாகும். மீதி வெற்றி பாடத்திட்டத்தை நேரத்திட்டமிடலுக்கேற்ப செயல் படுத்துவதிலேயே இருக்கிறது

முயற்சியும் பயிற்சியும் 

பயிற்சியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் ஒரே மூச்சில் செய்ய முடியாது. மலையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து எடுப்பதைப் போல சிறுசிறு பகுதிகளாக மனப்பாடம் செய்ய வேண்டும். பொதுவாக மனப்பாடப் பகுதிகளை குறிப்பெடுத்து வைத்துள்ள காகிதத்தை எப்போதும் பையிலேயே வைத்திருக்கவும். ஓய்விருக்கும்போதெல்லாம் அதனை எடுத்துப் பார்த்துக் கொள்வது விரைவில் மனப்பாடம் செய்திட உதவும். ஆங்கில வினா விடைகள், தமிழ் செய்யுள் பகுதி, பாடங்களிலுள்ள வினாக்களுக்கான விடைகளில் வரும் தலைப்புகள், துணைத் தலைப்புகள் ஆகியவற்றைப் படிப்பதற்கு இந்த முறையைப் பின்பற்றலாம்.

பாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அடிக்கடி சந்தேகங்களை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற விரும்பும் மாணவர்கள் இந்த முறையைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

படிக்கும் முறை 

படிக்கும் இடமும் நேரமும் மிகமிக இன்றியமையாதது. படிப்பதற்கு வீட்டில் தனியாக வசதியான அறை எல்லோருக்கும் இருக்காது. அப்படியானால் பகல் வேளைகளில் இயற்கையான தோட்டம், வயல் புறம் சென்று தனிமையில் படிக்கலாம். கணிதம் போன்ற பாடங்களை நண்பர்களுடன் கலந்துரையாடி படிப்பது நல்லது. (நண்பர்கள் கூட்டம் நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்).

முதல் மாணவனாக வரவிரும்பும் மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படித்து வந்திருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாளைக்கு ஏழு அல்லது எட்டு மணி நேரம் படிக்க வேண்டும். மனமும் உடலும் சோர்வின்றி இருப்பதற்காக ஒவ்வொரு முப்பது நிமிடம் படித்து முடித்ததும் பத்து நிமிடம் இடைவெளி விடலாம். படிக்கும் பாடங்களையும் இடத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வது நல்லது.

பொதுவாக வாய் விட்டுப்படிக்க வேண்டும். இல்லையேல் ல, ள, ர, ற, ன, ந, ண உச்சரிப்புப் பிரச்சினை ஏற்பட்டு தேர்வுத்தாளிலும் அவை தவறாகவேப் பதிவாகிவிடும்.

படித்தவற்றை தனக்குத்தானே எழுதிப் பார்த்து திருத்தி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பரிசீலித்துப் படிப்பதன் மூலம் படிப்பு இன்னும் எளிதாகும். 100 சதவீத பாடங்களை 100 விழுக்காடு தயாரித்துக் கொண்டவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களை (அதாவது 100 சதவீதம்) பெறுவது உறுதி. 100 விழுக்காடு பாடங்களை 50 விழுக்காடோ, 50 விழுக்காடு பாடங்களை 100 விழுக்காடோ தயார் செய்து கொண்டவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண்களை (அதாவது 200-க்கு 100) பெறுவது உறுதி

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One