Search

பள்ளிப்பாடத் திட்டத்தில் ஜல்லிக்கட்டு சேர்க்கப்படுமா?

Sunday 19 January 2020

பள்ளிப் பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்த தகவல்கள் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடத்தப்பட்டது. ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 700-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஜல்லிக்கட்டு தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ''ஜல்லிக்கட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே குறுந்தகடுகள் வழங்கப்படும். பாடப்புத்தகத்தில் ஜல்லிக்கட்டு சேர்க்கப்படும்போது கூடுதலாகப் படிக்கும் சுமை ஏற்படும். பெற்றோர்கள் கேட்கும் கேள்வியே பாடப்புத்தகங்களின் பக்கங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

எனினும் இதுகுறித்து கல்வியாளர்கள், முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதேபோல மூத்த அமைச்சர்களிடமும் ஜல்லிக்கட்டைப் பாடத்தில் சேர்ப்பது குறித்துக் கலந்து ஆலோசிக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

Most Reading

Tags

Sidebar One