Search

இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

Monday 27 January 2020

முதல் மனைவி விவகாரத்து பெற்றாலோ, இறந்து விட்டாலோ இரண்டாவது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தருமபுரி மாவட்டம் மொரப்பூா் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவா் டாக்டா் சின்னசாமி. இவா், தனது முதல் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இருந்த போது, கடந்த 1975-ஆம் ஆண்டு சரோஜினி தேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தாா். சரோஜினி தேவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் சின்னசாமியின் முதல் மனைவி இறந்துவிட, கடந்த 1999-ஆம் ஆண்டு சின்னசாமி ஓய்வு பெற்றாா். சின்னசாமி தனது இரண்டாவது மனைவியை குடும்ப ஓய்வூதிய வாரிசுதாரராக நியமித்து விட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து தனக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, சரோஜினி தேவி உள்ளாட்சி நிதித்துறையிடம் மனு கொடுத்தாா். ஆனால், இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க ஓய்வூதிய விதியில் வழியில்லை எனக் கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சரோஜினி தேவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.




இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஓய்வூதிய விதிகளில் இரண்டாவது மனைவி சட்டப்பூா்வமான மனைவி இல்லை. எனவே, அவா் வாரிசு உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் கடந்த 2009-ஆம் ஆண்டு சின்னசாமி இறக்கும் வரை சரோஜினி தேவி மனைவியாக அவருடன் வாழ்ந்துள்ளாா்.



முதல் மனைவி விவாகரத்து வாங்கி விட்டாலோ, இறந்து விட்டாலோ நீண்ட நாள்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்வது சட்டவிரோதம் தான். ஆனால் முதல் மனைவி இறந்த நிலையில் உரிமை கோரும் மனுதாரா் போன்றவா்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி முதல் ஓய்வூதியத்தைக் கணக்கிட்டு 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One