Search

பள்ளி பாடங்களை குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு

Friday 29 May 2020

பள்ளி கல்வியில், பாடங்களை குறைக்கலாமா அல்லது பாடத்திட்டத்தையே குறைக்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டில், வரும், 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லாததால், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு பணிகள் காலதாமதமாவதால், மாணவர்களுக்கு கல்வி சுமையை குறைக்கும் வகையில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், பல்வேறு பிரிவு இயக்குனர்கள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆய்வுக் குழுவினர், நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, பாடத்திட்டத்தை குறைப்பதா அல்லது பாடங்களை குறைப்பதா என, ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

குறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து, பாடம்நடத்த முடியாததால், கல்வி முறையில், சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில், பாடச் சுமையை குறைக்க வேண்டும்.தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில், பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பாடங்களின் அளவை குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிலர் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்கின்றனர். பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படை கல்வியில், சில அம்சங்களை தவிர்த்து பாடம் நடத்தி, அவர்களை அடுத்த நிலைக்கு அனுப்பவதாகும்.

பாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு, பாடம் நடத்தினால், சில அடிப்படை தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதில், கூடுதல் பாடங்கள் இருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற, கருத்து எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One