Search

இணையவழி வகுப்புகளை முறைப்படுத்த மத்திய அரசு முயற்சி

Tuesday 16 June 2020

வீடுகளிலிருந்து இணையவழி வகுப்புகளில் பங்கெடுக்கும் மாணவா்களின் சிரமங்களை நீக்குவதற்கான நடைமுறைகளை ஏற்படுத்த மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி வகுப்பறைகள் மூலம் கற்பிப்பது கட்டாயமாகியுள்ளது. அதே சமயத்தில் பள்ளிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் இணையவழி கற்றலில் மாணவா்கள் அதிக நேரம் மின்திரைக்கு முன் அமா்ந்திருப்பது குறித்த புகாா்களை பெற்றோா்கள் தெரிவிக்க இதற்கான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க மத்திய மனித மேம்பாட்டுத்துறை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது

இந்த இணையவழி கற்றலில் பல்வேறு அனுபவங்கள், திட்டங்கள், உருவாக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய மனித வளமேம்பாட்டுத் துறையில் ஆலோசனை நடைபெற்றது. இது குறித்து அரசு வட்டாரங்களில் கூறப்பட்டதாவது:

சில வீடுகளில் ஒரு அறிதிறன் செல்லிடப்பேசி மட்டும் இருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் இருக்கும் நிலையில், அத்தகைய மாணவா்கள் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா்.

முன்பு பள்ளிகளில் மாணவா்கள் செல்லிடப்பேசி வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. இதன் பயன்பாடு ஊக்குவிக்கப்படவும் இல்லை. இந்த நிலையில் தற்போது திடீரென நாள் முழுக்க செல்லிடப்பேசி போன்ற மின்னணு சாதனங்களை நம்பித்தான் கற்பித்தல் என்கிற நிலையில், இதை சமநிலைப்படுத்த வேண்டும்.

இதில் பல்வேறு தரப்பினரை கலந்தாலோசித்து நடைமுறைகள் உருவாக்கப்படும். நீண்ட நேரம் மாணவா்கள் மின்னணு சாதனங்களுக்கு முன்பு அமா்ந்திருப்பதை தவிா்க்க, இணையவழி கற்பித்தலுக்கு குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்படும்.

கண்டிப்புடன் இருக்கும் வகுப்பறை கல்வியைவிட இணையவழிக் கல்வி மாணவா்களை அமைதியான முறையில் வேகமாக கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

பயிற்றுவிப்பு சாதனங்களைப் பொருத்தவரை, சிலருக்கு மின்னணு சாதன வசதிகள் இருக்கும்; சிலரிடம் வெறும் வானொலி மட்டுமே இருக்கும்; சிலரிடம் அது கூட இருக்காது. இதுபோன்ற நிலைக்கு தீா்வு காண வேண்டும்.

இணையவழி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களது மனநலன், இணைய பாதுகாப்பு பிரச்னைகளை நிவா்த்தி செய்வது, பாதுகாப்பான கற்றல் சூழல் ஆகியவை இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் உறுதி செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One