Search

பள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்?

Monday 22 June 2020

எந்தப் பள்ளியும் பெற்றோர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில்லை. எனவே, இருப்பவற்றில் சிறந்தவற்றை, தங்களுக்கு திருப்தியானவற்றை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

எனவே, ஒரு பள்ளியில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பட்டியலிட வேண்டும். அதில் மட்டும் சமரசம் செய்துகொள்ளவே முடியாது. அந்த முக்கிய அம்சங்களைப் பற்றிய ஒரு அலசல்.

பாடத்திட்ட தேர்வு

சில பெற்றோர்கள் தங்களின் குழந்தை CBSE பாடத்திட்டத்தில்தான் படிக்க வேண்டும் என்று விரும்புவர். ஏனெனில், அப்பள்ளிகள், நாடு முழுவதும் பரவலாக அதிக எண்ணிக்கையில் உள்ளன. மத்திய அரசுப் பணிகளில் உள்ள பெற்றோர்கள், அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாவார்கள்.எனவே, அவர்களுக்கு CBSE பள்ளியை மாற்றிக் கொள்வது மிகவும் எளிது.

ஏனெனில், CBSE பாடத்திட்டத்தில் பள்ளிக்கு பள்ளி நிறைய ஒற்றுமைகள் இருக்கும் என்பதால், தங்களின் பிள்ளைகளால், பள்ளி மாறினாலும், படிப்பில் எளிதாக ஒன்றிவிட முடியும் என்பது அவர்களின் முடிவுக்கு முக்கிய காரணம்.

அதேசமயம், வேறுசிலர், தங்களின் பிள்ளைகளை CBSE -ஐ விட ICSE பாடத்திட்டத்தில் சேர்க்க விரும்புவர். ஏனெனில், CBSE பாடத்திட்டத்தில், கணிதத்திற்கும், அறிவியலுக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், ICSE பாடத்திட்டத்தில் அனைத்து பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பள்ளியின் சிறப்பு

எப்படிபட்டாவது, தங்களின் பிள்ளைகளை பெயர்பெற்ற பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்பது பல பெற்றோர்களின் ஆவலாக உள்ளது., புதிதாக தொடங்கியிருக்கும் பள்ளிகளை ஒப்பிடுகையில், பல ஆண்டுகளாக இயங்கிவரும் பெயர்பெற்ற பள்ளிகளின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது என்பது பல பெற்றோர்களுக்கு நடைமுறை அனுபவமாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணம், அந்தப் பள்ளிகள் இத்தனை ஆண்டுகளாக பெற்ற அனுபவமே.

திறன்சார் நடவடிக்கைகள்

Extra Curricular Activities எனப்படும் திறன்சார் நடவடிக்கைகளுக்கு பல பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படிப்பிற்கு சமமாக அவற்றை அவர்கள் எண்ணுகிறார்கள். எனவே, அத்தகைய பள்ளிகளை அவர்கள் தேடுகிறார்கள்.

விளையாட்டு நடவடிக்கைகள், குழு உணர்வை கற்றுக்கொள்ளல் இதர திறன்சார் போட்டிகளில் பங்கேற்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளல் உள்ளிட்டவை அவர்களுக்கு பிரதானம்.

உள்கட்டமைப்பு

பள்ளிகளை தேர்வு செய்கையில், சிலர், உள்கட்டமைப்பிற்கு பிரதான முக்கியத்துவம் கொடுப்பார்கள். வளாகத்தின் மொத்த அளவு, பள்ளி மைதானத்தின் அளவு மற்றும் அதிலுள்ள வசதிகள், வளாகத்தில் பராமரிக்கப்படும் சுத்தம் மற்றும் சுகாதாரம், கழிப்பறை வசதிகள், சிறந்த ஆய்வக வசதிகள், வகுப்பறை அமைப்புகள் மற்றும் அங்குள்ள வசதிகள் உள்ளிட்ட பலவிதமான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல் முக்கியத்துவம் தரும் பல பெற்றோர்கள் உண்டு.

ஆசிரியர்கள்

ஒரு ஆசிரியர் என்பவர் வழிகாட்டியாக செயல்பட்டு, குழந்தையின் உள்ளாற்றலை வெளிக்கொண்டு வருபவராக இருக்க வேண்டும். ஆசிரியர் குழந்தைகளுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்குபவராக இருத்தல் வேண்டும்.

தேவையான கல்வித்தகுதி, அறிவு, அனுபவம் மற்றும் தனிப்பட்ட அக்கறை ஆகியவை ஒரு சிறந்த ஆசிரியருக்கான அளவுகோல். எனவே, அத்தகைய ஆசிரியர்களை நிரம்ப பெற்றிருக்கும் ஒரு பள்ளியை, அதிக பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

நல்ல உள்கட்டமைப்பு மற்றும் தரமான ஆசிரியர்கள் ஆகிய இரண்டு தகுதிகளையும் பெற்றிருக்கும் ஒரு பள்ளி, தமது வீடுகளிலிருந்து தூரமாக இருந்தாலும் சரி, அப்பள்ளிகளிலேயே பிள்ளைகளை சேர்ப்பது பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.

அருகாமை

வீட்டுக்கு அருகாமையில் பள்ளி இருப்பது பலவித நன்மைகளைத் தருகிறது. கிளம்பும் நேரம், பயணம், அவசரகால தொடர்பு மற்றும் வீடு திரும்புதல் உள்ளிட்ட விஷயங்களில் நிறைய செளகரியங்கள் கிடைக்கின்றன.

சில சமயங்களில் குழந்தைகளுக்கு பள்ளியில் இருக்கும்போது ஏதேனும் எதிர்பாராத உடல்நலக்குறைவு ஏற்பட்டு விடலாம். அப்போது பள்ளியிலிருந்து பெற்றோருக்கு தகவல் தரப்படும். அந்த சமயத்தில் பள்ளி அருகில் இருந்தால் அங்கே சென்றடைந்து, குழந்தையை அழைத்து வருவது மிகவும் எளிது.ஆனால், பள்ளி தூரமாக இருந்து, பெற்றோர் சென்று சேர்வதற்குள், குழந்தையின் நிலை மோசமடைந்து, அதை மீண்டும் நீண்டதூர பயணத்தில் வீட்டிற்கு அழைத்து வருவது கடினமான காரியம்.

மேலும், சென்னை போன்ற நகரங்களில் சாலையெங்கும் நிறைந்திருக்கும் ஆபத்துக்கள், குழந்தைகள் நீண்டதூரம் பயணம் செய்து பள்ளிக்கு செல்வதை அதிக அபாயகரமானதாக ஆக்குகின்றன.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One