Search

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்.26ல் செய்முறை தேர்வு

Sunday 23 February 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, 26.02.2020 முதல் 28.02.2020 வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.


மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சியுறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுத அறிவிக்கப்படுகிறார்கள். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிவிப்பின் மூலம், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்வதற்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.


அதே போல் நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 25.02.2020 பிற்பகல் முதல் www.tndge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று ஹால்டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தை அழுத்த வேண்டும்.அப்போது தோன்றும் பக்கத்தில் எஸ்எஸ்எல்சி எக்சாம் மார்ச் 2020 - பிரைவேட் கேன்டிட்டேட்- ஹால்டிக்கெட் பிரின்ட் அவுட் என்ற வாசகத்தை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியை அளித்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


அறிவியல் பாட செய்முறை தேர்வு குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். மார்ச் 2020 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை www.tndge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One