Search

DGE - பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு

Tuesday 9 June 2020



DGE Proceedings - Download here...

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பில் , மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் பொதுத் தேர்வுகளை தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதால் , அரசு இது குறித்து விரிவாக ஆய்வு செய்து , மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க வருகின்ற 15.06.2020 முதல் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது எனவும் , இந்த தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது எனவும் , மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .


இப்பொருள் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .




1. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 15.06.2020 முதல் 25.06.2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .

2. மார்ச் 2020 பருவத்திற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் நடத்தப்படாமல் விடுபட்டு போன பின்வரும் பாடத்தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .


i . வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் ( புதிய பாடத்திட்டம் )
ii . வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் ( பழைய பாடத்திட்டம் )



3. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் .


4. 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளான வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது . இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .


5. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள விவரத்தினையும் , தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினையும் , அவர்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .


6. இரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.


7. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் , மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் .


8. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One