Search

12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை – மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை

Saturday 18 July 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு பிரச்சினையால் ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் ஏராளமான மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் பொக்ரியால் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ”இந்தியா முழுவதும் ஏராளமான கல்வி வாரியங்கள் தங்களின் 12-ஆம் வகுப்புத் தேர்வைப் பகுதியளவு ரத்து செய்துள்ளன. இந்நிலையில், IIT மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் ஜேஏபி தளர்த்தியுள்ளது.  JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்கள் IIT-இல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட JEE மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், JEE மேம்படுத்தப்பட்ட தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One