Search

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம்!: வரும் 14ம் தேதி முதலமைச்சர் துவங்கி வைக்க திட்டம்!

Friday 10 July 2020


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டம் வருகின்ற 14ம் தேதி துவக்கி வைக்கப்படவுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி வருகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. ஆனால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்று ஒன்று கிடையாது. இதனால் அவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால் அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதில் குளறுபடிகள் ஏற்படும் என்பதால் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வருகின்ற 14ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக பிரித்து 3 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளன. ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகள் மற்றும் நேரம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் இன்னும் போய் சேராத நிலையில், தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த துவங்க இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது, தொலைக்காட்சி வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படும். இதை வரும் 14ம் தேதி  முதல்வர் தொடங்கி வைக்கிறார். பள்ளி கல்வித்துறை தொடர்பாக யார் கருத்து கூறினாலும் அரசு ஏற்கும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One