Search

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை அரசாணை வெளியீடு

Friday 10 July 2020


பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

* பாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் வழங்கும்போது நீண்ட வரிசை ஏற்பட்டுவிடாமல் இருக்க முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும். குறிப்பிட்ட 1 மணி நேரத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் அழைக்கப்படக்கூடாது.

* கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள், தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னரோ அல்லது நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரோ பள்ளிக்கு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

* கல்வி உபகரணங்கள் வழங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தரையில் வட்டம் வரையவேண்டும்.

* மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முககவசம் அணியவேண்டும்.

* பிளஸ்-2 மாணவர்களின் லேப்டாப்பில் கல்வி வீடியோ பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனை கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு, அவர்களை உள்ளே அழைத்துச்சென்றுவிட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.

* மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்காக 2 வகுப்பறைகள் சமூக இடைவெளி உடன் காத்திருப்போர் அறைகளாக பயன்படுத்தவேண்டும்.

* புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வினியோகிப்பதற்கு முன்பு பள்ளி வளாகம், மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். இந்த நடைமுறை கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பு தினந்தோறும் பயன்படுத்தப்படவேண்டும்.

* கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும். மேலும் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினி வழங்கப்படவேண்டும்.

* ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கைகளை சோப்பால் கழுவிய பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கைகளை கழுவுவதற்கு வசதியாக கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவை பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் வைக்கவேண்டும்.

கிருமிநாசினி தெளிக்கவேண்டும்

* கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.

* ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொறுப்பு.

* ஆசிரியர்கள், மாணவர் கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சுத்தமான முககவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். முககவசத்தை தொடுவதை குறைக்கவேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.

* மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரை தளங்களை தொடுவதை தவிர்க்கவேண்டும்.

* பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One