Search

கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம்-உயர் நீதிமன்றம்

Friday 17 July 2020

கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் தனியாா் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது தனியாா் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை மூன்று தவணைகளாக செலுத்த அனுமதி வழங்க அரசு பரிசீலிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். தனியாா் கல்வி நிறுவனங்கள் மொத்த கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்கவும், எஞ்சியுள்ள 25 சதவீத தொகையை கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட பின்னா் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்க உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழலில் கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்க வாய்ப்புள்ளதாக தெரியவில்லை. எனவே, கடந்த கல்வியாண்டில் வசூலித்த கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்த 40 சதவீத முன்பணத்தை மாணவா்கள் வரும் ஆகஸ்டு 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கடந்த கல்வியாண்டில் பாக்கி வைக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை வரும் செப்டம்பா் மாதம் 30 – ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், 35 சதவீத கட்டணத்தை இயல்புநிலை திரும்பி கல்லூரிகள், பள்ளிகள் திறந்து, இரண்டு மாதங்களுக்குப் பின்னா் மாணவா்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.

மேலும் கல்விக் கட்டண நிா்ணயக் குழு வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து 8 மாதங்களுக்கு கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும். தனியாா் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பிற வகை பணியாளா்கள், இயல்பு நிலை திரும்பும் வரை ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப் பலன்களைக் கேட்கக்கூடாது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு இலவசமாக புத்தகங்கள், நோட்டுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபா் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One