Search

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

Sunday 14 June 2020

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தலா ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.அதனையடுத்து, மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வரை நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வும் முழுமையாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 ஒரு பாடத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த 9ம் தேதி அறிவித்தார்.
மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவித்தார். இதனையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்க, வருகை பதிவேட்டை, கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் வருகைப் பதிவை, மார்ச் 21 வரை முழுமையாக உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அந்த வருகைப்பதிவேட்டை, ஒவ்வொரு பிரிவு வாரியாக காட்டி, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை, மாவட்ட கல்வி அலுவலகத்தில், கிருமிநாசினி தெளித்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன.

இதில், 439 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. அதில், 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என 35,546 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். இந்நிலையில், கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, பள்ளி நிர்வாகங்கள் நேற்று ஒப்படைத்தன. இதனையடுத்து, மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One