Search

அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை

Thursday 18 June 2020

முழுமையான பொதுமுடக்கத்தின்போது அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, புதன்கிழமை இரவு அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 18) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும், முழு பொதுமுடக்கத்தில் அரசு தெரிவித்த அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படும். மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனை கூடங்கள், மருந்தங்கள்,ஆம்புலன்ஸ்,அமரா் ஊா்தி சேவைகளுக்கு அனுமதி உண்டு. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியாா் வாகனம், ஆட்டோ, டாக்ஸி பயன்படுத்த அனுமதிக்கப்படும். வேறு காரணங்களுக்கு வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது.

பொதுமுடக்கத்தின்போது பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகே சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள கடைகளிலேயே பொருள்களை வாங்க வேண்டும். தேவையின்றி பிற இடங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும். உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியா்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தண்ணீா், பால்,பெட்ரோல், சமையல் எரிவாயு, வங்கிகள் ஆகியவற்றின் ஊழியா்கள் அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு,உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

கடுமையான நடவடிக்கை: விமானம், ரயில் பயணிகள் தங்களது பயணச்சீட்டை கையில் வைத்திருத்தல் வேண்டும். வாகனச் சோதனையின்போது பயணச் சீட்டை கண்டிப்பாக காவல்துறையினரிடம் காட்ட வேண்டும். அனுமதிச் சீட்டு இன்றி வாகனங்களில் சாலையில் சுற்றித் திரிபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். போலியான அனுமதி சீட்டு மூலம் வாகனங்களை இயக்கினால், 144 தடைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோா்,மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்கள்,வீட்டில் தங்கியிருக்கும் முதியோா்கள்,நோயாளிகள் ஆகியோருக்கு உதவி புரிவோா் செல்வதற்கு வாகன அனுமதி வழங்கப்படும். இவா்கள் தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டும். இந்த உத்தரவுகளுக்கு சுகாதாரத்துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை, நீதித்துறை, பத்திரிகை துறை ஆகிய துறைகளைச் சோந்தவா்கள் அரசு ஏற்கெனவே அறிவித்தப்படி விதி விலக்குவாா்கள்.

இது தொடா்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-23452330,044-23452362 ஆகிய தொலைபேசி எண்களையும்,90031 30103 என்ற செல்லிடப்பேசி எண்ணையும் தொடா்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One