Search

பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை முடக்கிய கொரோனா ; ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகும் குழந்தைகள்

Thursday 18 June 2020

பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிவருகின்றன' என்று சமீபத்தில் சொன்னார் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரே. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பள்ளிக்கூடங்கள் என்பது கல்வி சொல்லித்தரும் இடமாக மட்டும் இருப்பதில்லை. பள்ளிக்கூடங்களின் விடுமுறை நாள் என்பது கல்வி போதிக்கப்படுவது இல்லாத நாள் மட்டுமில்லை. இந்தியாவின் அங்கன்வாடிகளும், அரசு பள்ளிக்கூடங்களும் செயல்படவில்லை என்றால் இங்குக் குழந்தைகளுக்குச் சத்துணவாகக் கிடைக்கும் உணவும் கிடைக்காமல் போகும். தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், இந்தியா முழுக்க பள்ளிக்கூடங்களும், அங்கன்வாடிகளும் இயங்காமல் உள்ளதால் நம் நாட்டுக் குழந்தைகள் போதிய உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், அவை வளர்ந்த பின் எந்த நோய்களும் அவர்களைத் தாக்காமல் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கும் அவர்களின் தொடக்கக் காலத்தில் அவர்கள் உட்கொள்ளும் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் ஏழை குழந்தைகளுக்கு அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களின் மூலமாகவும், பள்ளிகளின் மூலமாகவும் அரசு சார்பில் சத்துணவு வழங்கப்படுகிறது. அரசி, முட்டை, பால், பருப்பு என ஒவ்வொரு மாநில அரசும் வழங்கும் உணவு மாறுபட்டாலும் பல லட்ச ஏழை குழந்தைகளுக்கு இவை ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு முக்கியமான அரசுத்திட்டம்.

இப்போது லாக்டவுன் காரணமாக இந்த மதிய உணவுத்திட்டம் செயல்படாமல் இருப்பதால், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாவதோடு மட்டுமில்லாமல் அவர்கள் கோவிட் 19 நோய் தாக்கினால் அதிக பாதிப்பு ஏற்படும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் இத்தனை வருடங்களாக ஒவ்வொரு மாநில அரசும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு குறைபாட்டைப் போக்கச் செயல்படுத்தி வந்த திட்டங்களும், பல்வேறு அங்கன்வாடி பணியாளர்களின் உழைப்பும் பயனற்றதாகி போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஒரு குழந்தை குறைபாட்டோடு வளர்கிறது என்பதை மூன்று காரணிகளை கொண்டு அளவிடலாம். வயதுக்கு ஏற்ற உயரத்தைவிடக் குறைவாக இருப்பது, உயரத்துக்கேற்ற எடையை விடக் குறைவாக இருப்பது மற்றும் வயதுக்கேற்ற எடை இல்லாமல் குறைவான எடையில் இருப்பது. இந்தியாவைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டு வரை உள்ள நிலவரப்படி 5 வயதுக்குள்ளான குழந்தைகளில் 39% சதவீத குழந்தைகள் வயதுக்கேற்ற உயரத்தைவிடக் குறைவான உயரத்தில் உள்ளனர். 13% சதவீதத்தினர் உயரத்துக்கேற்ற எடையில்லாமல் குறைவான எடை கொண்டுள்ளவர்களாகவும், 33% சதவீதத்தினர் வயதுக்கேற்ற எடை இல்லாமல் குறைவான எடையில் உள்ளதாகவும் 'தி லான்செட்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான அந்தந்த நாட்டு அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுக்க ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் 6000 பேர் இறக்கக்கூடும் என யுனிசெப் அமைப்பு எச்சரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகி அதன் மூலமாக இறப்புக்கும் ஆளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டிலிருந்து 2030-ம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு உள்ள ஊட்டச்சத்துக் குறைபாட்டை 50% சதவீத அளவில் குறைக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால், இந்த இலக்கை இந்தியா அடைய பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் 68% சதவீத 5 வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு, தாய் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு இருப்பதால் நிகழ்வதாக 'இந்தியா ஸ்பெண்ட்' செய்தி நிறுவனம் கடந்த மே மாதம் குறிப்பிட்டுள்ளது.

இது எல்லாவற்றையும் விட கரோனா வைரஸ் பரவி கோவிட் 19 நோய் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சூழலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு உள்ள குழந்தைகள் இந்த கரோனா வைரஸுக்கு எளிய இலக்காக மாறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவிட் 19 நோய் தாக்கும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தை உயிர்பிழைத்தாலும், வளர்ச்சியில், கற்றலில் குறைபாடுள்ள குழந்தையாக வளரும் எனவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி, ஊட்டச்சத்து குறைபாட்டோடு சம்பந்தமுடையது என்பதால், கோவிட் 19 நோய் தாக்கினால் பாதிக்கக்கூடிய நபர்களில் ஊட்டச்சத்து குறைபாட்டோடு உள்ள குழந்தைகளும் அடங்குவார்கள் என்பதே உண்மை.

இந்திய அளவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் மாணவர்கள் இந்த சத்துணவு கிடைக்காமல் அவதிப்பட்டே வருகின்றனர். சாதாரண நாட்களில் தினமும் அரிசி, முட்டை என மதிய உணவு வழங்கப்பட்டு வந்த குழந்தைகள் எல்லாம் கடந்த 3 மாதங்களாக அந்த ஒரு வேளை சத்தான உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை ஒருவரிடம் இது குறித்துப் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் "கடந்த மூன்று மாதங்களாகவே பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் சத்துணவு வழங்குவதும் நின்றுவிட்டது.
நான் பணிபுரியும் பள்ளியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்ப்பவர்கள். மேலும் எங்கள் பள்ளி அமைந்திருக்கும் சுற்று வட்டாரங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும், குறு, சிறு நிறுவனங்களிலும் பணிபுரிபவர்கள். இதில் அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தை நம்பியிருப்பவர்களும் அடக்கம். இவை அனைத்திலும் கடந்த மூன்று மாதமாக பணிகள் ஏதும் இல்லை என்பதால் அவர்களுக்கு வருமானம் என்பது இல்லாமல் ஆகிவிட்டது." என்று லாக்டவுன் காரணமாக தன் மாணவர்களின் குடும்பங்களில் வருமானம் மோசமாக பாதிப்படைந்துள்ளதைத் தெரிவித்தார்.

மேலும், "லாக்டவுன் காலத்துக்கு முந்தைய சாதாரண நாட்களிலேயே இந்த குழந்தைகள் வீடுகளில் தினசரி சத்தான உணவு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். ஆனால் இப்போது பள்ளியிலிருந்து வரும் சத்துணவும் இல்லை, வருமானமும் இல்லை என்பதால் நிலைமை மிக மோசமாகவே உள்ளது." என்று தெரிவித்தார்.
சென்னை போன்ற பெருநகரங்களுக்குள் அமைந்திருக்கும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் குடும்பங்கள் பிழைப்புக்காகத் தமிழகத்தின் வேறு ஊர்களிலிருந்து சென்னை வந்தவை. தற்போது லாக்டவுன் காரணமாகவும், வேலை வாய்ப்புகள் அற்றுப் போயிருப்பதாலும் இதில் பெரும்பாலான மாணவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளன. அங்கும் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றே.
இது ஒரு புறமிருக்கச் சத்துணவுக்காகப் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்களான அரசி, பருப்பு உள்ளிட்டவை சேமிப்பு கிடங்குகளில் எந்த கவனிப்பின்றி இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நாம் இது தொடர்பாகப் பேசிய ஆசிரியர் ஒருவர், அவருடைய பள்ளியில் உள்ள இந்த சத்துணவு சம்பந்தமான மளிகைப் பொருட்கள் அனைத்தும் அந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் அம்மா உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிகழ்வுகளும் நடந்துவருகின்றன. இது அரசாங்க நிறுவனங்களில் வழக்கமாக இருந்த வழங்கல் முறைகள் கரோனா பாதிப்பால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகிறது.

பள்ளிகள் இப்படி இருக்க ஒரு சில அங்கன்வாடிகளைப் பொருத்த அளவில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் அந்த அங்கன்வாடிகளைச் சேர்ந்த குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு, முட்டை போன்றவற்றை வாரம் ஒரு முறை வழங்கப்பட்டுவருகிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்றால் ஒருவேளை கரோனா பரவலைத் தடுக்க அரசு அங்கன்வாடி பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோரை கரோனா தடுப்புப் பணிகளுக்காக பயன்படுத்த முடிவெடுக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த உணவுப் பொருட்களை மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று சேர்க்க முடியாத நிலையும் ஏற்படும்.

இப்படிபட்ட ஒரு இக்கட்டான சூழலைக் கட்டுப்பாடில்லாமல் ஏற்பட்டு வரும் கரோனா தொற்று என்பது மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் குடிசைப்பகுதிகள் அதிகம் உள்ள இடங்களில் கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இது போன்ற ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளே பெரும்பாலும் அரசின் அங்கன்வாடிகளிலும், தொடக்கப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் பயில்கிறார்கள். அதே போல் இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் கூலி வேலைப் பார்ப்பவர்கள். அவர்களின் வருமானம் என்பது கடந்த மூன்று மாதமாகப் பெருமளவில் இல்லாமல் ஆகியுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் கரோனா பரவும் இந்த காலத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையையும் மேல் குறிப்பிடப்பட்டுள்ள சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கோவிட் 19 நோய் என்பது எவ்வளவு கொடியது என்றும், அரசின் முன் எவ்வளவு பெரிய பொறுப்பும், கவனம் கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினை இருக்கிறது என்பதும் விளங்கும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One