Search

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராவது எப்படி?

Sunday 20 January 2019


மூன்று முக்கிய கட்டங்கள்
ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,ஐ.ஆர்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்துகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் இந்தப் போட்டித்தேர்வுகளில் ஒருசிலரால் மட்டுமே வெற்றிபெற முடிகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் இந்தப் போட்டித்தேர்வில் வெற்றிபெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இந்தத் தேர்வுக்குத் தயாராவது எளிதல்ல என்றாலும், முறையாகத் திட்டமிட்டு குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவது நிச்சயம்.

மூன்று முக்கிய கட்டங்கள்
ஐ.ஏ.எஸ். தேர்வு  3 கட்டமாக  நடத்தப்படும். முதல் கட்டம் பிரிலிமினரி தேர்வு, அதாவது, முதல்நிலைத் தேர்வு. இரண்டாவது கட்டம் மெயின் தேர்வு, அதாவது, முதன்மைத் தேர்வு. மூன்றாவதாக இன்டர்வியூ எனப்படும் பெர்சனாலிட்டி டெஸ்ட் எனப்படும் நேர்முகத் தேர்வு. முதலில் முதல்நிலைத் தேர்வு. இதில் இரண்டு பேப்பர் உள்ளது.

ஒன்று பொது அறிவுத் தாள் மற்றொன்று ‘சிசாட்’ என்கிற திறனறி தேர்வு. இந்த இரண்டு தாள்களுக்கும் வெவ்வேறு விதமான அணுகுமுறை மிகவும் முக்கியம். உதாரணமாக ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் பொது அறிவுத் தாளுக்கு ‘பிரிப்பரேஷன்’ மிக முக்கியம். ஏனென்றால், அதில் உங்கள் பொது அறிவு சோதனை செய்யப்படும். ‘சிசாட்’ என்பது உங்கள் வேகம் மற்றும் துல்லியத்தை சோதனை செய்யும் தாள்.

இந்த இரண்டிலும், மிக மிக முக்கியமான தாள் என்றால் ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும் பொதுஅறிவுத் தாள்தான். ‘சிசாட்’ தாள் வெறும் தகுதித்தாள் மட்டும்தான். அதில் குறைந்தபட்சம் தகுதி மதிப்பெண்களை எடுத்தாலே போதுமானது. எனவே, முதல்நிலைத் தேர்வில்  ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிப்பது பொது அறிவுத் தாள்தான். அதில் ஒருவர் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்.

முதல்நிலைத் தேர்வின் பொதுஅறிவுத்தாளில் கேட்கப்படும் கேள்விகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று கன்வென்ஷனல் என்று சொல்லப்படும் மரபு சார்ந்த பகுதிகளான வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம் போன்ற பகுதிகள். மற்றொன்று நடப்பு நிகழ்வுகள் (Current Affairs ). இந்த இரண்டில் இருந்தும் 100 கேள்விகள் கேட்பார்கள். இந்த இரண்டு பிரிவுக்கும் தேர்வர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு மாணவர்  NCERT புத்தகங்களிலிருந்து தொடங்க வேண்டும்.

அதாவது, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். அதில்தான், ஒவ்வொரு பாடப்பிரிவிலிருந்தும் தேர்வுக்குத் தேவையான அடிப்படை அறிவு கிடைக்கும். அறிவியலுக்கு மட்டும் 12ம் வகுப்பு வரை  புத்தகங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமூக அறிவியலுக்கு புத்தகங்கள் 6 முதல் 12ம்  வகுப்பு வரையிலான  NCERT புத்தகங்களைக் கட்டாயம் ஒரு மாணவர் படிக்க வேண்டும்.

அடுத்து, ‘கரன்ட் அஃபையர்ஸ்’ என்று சொல்லக்கூடிய நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு ஏதாவது ஒரு தரமான ஆங்கிலம் மற்றும் தமிழ்ச் செய்தித்தாளைத் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் கட்டாயம் படிக்கவேண்டும். குறிப்பாகத் தலையங்கங்களைத் தவறவிட்டுவிடக்கூடாது. இதுதவிர, தேசிய அளவில் தரமான நியூஸ் சேனல் மற்றும் அதில் விவாதிக்கப்படும் சமூக பொருளாதார விவகாரங்களை உள்வாங்குதல் போன்ற செயல்பாடுகள் நடப்பு நிகழ்வுப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொள்ள உதவும்.

நடப்பு நிகழ்வுகளுக்கு மேற்சொன்னவை மட்டுமின்றி மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருதலும் அவசியம். ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறப் பொதுவாக எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கேட்பதுண்டு. சிலர் 18 மணி நேரம் படிக்க வேண்டும், சிலர் 15 மணி நேரம் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.

இது எல்லாமே ஒப்பீட்டளவிலான வார்த்தைகள்தான். அதாவது, 18 மணி நேரம் கட்டாயம் படித்தால்தான் ஐ.ஏ.எஸ். ஆக முடியும் என்பதெல்லாம் கிடையாது. சில நேரங்களில் சிலபேர் 5 மணி நேரம் படித்துகூட ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார்கள். 18 மணி நேரம், 10 மணி நேரம், 5 மணி நேரம் என்பது எல்லாமே நபருக்கு நபர் வேறுபடும். நாம் எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. எப்படிப் படிக்கின்றோம், எதைப் படிக்கின்றோம் என்பதுதான் முக்கியம்.

பொதுவாக முதற்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்விற்கு ‘எக்ஸ்டென்சிவ் ரீடிங்’ என்று சொல்லக்கூடிய பரந்துபட்ட வாசிப்பு மிகவும் முக்கியம். ஆனால், இரண்டாம் கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு ‘எக்ஸ்டென்சிவ் ரீடிங்’கை விட ‘இன்டென்சிவ் ரீடிங்’ மிக மிக முக்கியம். அதாவது, ஆழ்ந்து படிக்கக்கூடிய தன்மை. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் ஆழ்ந்து அலசி ஆராய்ந்து படிக்கவேண்டும்.

இன்னொரு முக்கியமான, மிகவும் அவசியமான தேவை என்னவென்றால், அது முதல்நிலைத் தேர்வென்றாலும் முதன்மைத் தேர்வென்றாலும் நடப்பு நிகழ்வை கன்வென்ஷனல் பாடங்களுடன் தொடர்புபடுத்தி படிக்கும் திறமை. எல்லோருமே வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம் போன்ற பகுதிகளையும் நடப்பு நிகழ்வையும் படிப்பார்கள். ஆனால், எவர் ஒருவர் நடப்பு நிகழ்வை வரலாறு, புவியியல், அரசியலமைப்பு போன்ற பகுதிகளுடன் தொடர்புபடுத்தி படிக்கின்றாரோ அவரே வெற்றியாளர் ஆகிறார். நடப்பு நிகழ்வில் மேற்சொன்னவாறு வரலாறு, புவியியல், அரசியலமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியோ அல்லது நேரடியாகவோ கேள்விகள் கேட்கலாம்.

மொத்தத்தில் 100 கேள்விகளில் கிட்டத்தட்ட 50 கேள்விகளுக்கு மேல் நடப்பு நிகழ்விலிருந்து கேட்கப்படும். அடுத்து முதன்மைத் தேர்வு. இது ஐ.ஏ.எஸ். தேர்வின் முக்கியமான இரண்டாவது கட்டம். இந்தத் தேர்வுக்குக் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால், இதில் 4 பொது அறிவுத் தாள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 250 மார்க்குகள். அது மட்டுமல்லாமல் ஒரு விருப்பப் பாடமும் இருக்கும். இதில் 26 சப்ஜெக்ட்ஸ் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். நாம் என்ன டிகிரி படித்துள்ளோமோ அதற்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத சப்ஜெக்டைகூட ஒருவர் தேர்வு செய்துகொள்ளலாம். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்திருந்தாலும், புவியியலை விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

அந்த விருப்பப்பாடத்தில் இருந்து 500 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இதற்கு ‘இன்டென்சிவ் ரீடிங்’ மிக மிக முக்கியம். சிலபஸில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் நிறுத்தி தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். பிரிலிமினரி தேர்வு முடிந்தவுடன் உடனடியாக மெயின் தேர்வுக்குத் தயாராக வேண்டும். அதில் ஒருவர் தேர்வுக்கான தயாரிப்பை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மெயின் தேர்விலுள்ள நான்கு பொது அறிவுத் தாளில் எந்த அளவுக்கு மதிப்பெண்களைக் குவிக்கின்றோம் என்பது நாம் என்ன மாதிரியான விருப்பப்பாடத்தைத் தேர்வு செய்துள்ளோம் என்பதைப் பொறுத்தது. அதனால் ஒரு மாணவர் விருப்பப்பாடத்தைத்  தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு உயர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவோர், அதற்கான அனுமதி அட்டையை முன்னதாகவே, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு முறையும் அறிவிப்பு வெளியிடுகிறது.

கடைசிநேர நெரிசலைத் தவிர்க்க முன்னதாகவே பிரின்ட் செய்து, அதில் ஏதாவது தவறு இருந்தால், உடனடியாகத் தேர்வாணையத்தின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும். தேர்வறையில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்த அறிவுரைகள் அடங்கிய பக்கத்தையும் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களில், ஏதாவது தவறு இருந்தால் அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும். தேர்வு எழுத வரும்போது மொபைல்போன், லேப் - டாப், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து வரக்கூடாது. அவ்வாறு எடுத்து வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்குத், தேர்வாணையத்தின் www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One