சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் முறைகள்


சிவில் சர்வீஸ் தேர்வு
சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும்.

தேர்வு முறை

பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு  பட்டப் படிப்பு.  அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.  பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.

வயது
குறைந்தபட்ச வயது  21.

பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35.

பொதுப்பிரிவினர் நான்கு முறையும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.

தேர்வு எழுதும் முறை
இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும்,  நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.  தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘  நடத்தப்படுகிறது.  அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200.  இரண்டாவது தாள் பொது அறிவு.  அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்.  இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.

மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு  இருக்கின்றன.  அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு.  அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு.  அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.  இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது.  தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம்.  இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.  ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.

ஆளுமைத் தேர்விலும்,  பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.

சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.   பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு,  அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.  பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.  முடிந்தால்  நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம்.  தேர்விற்குத் தயாவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும்.  விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம்.