Search

குடிமைப்பணி தேர்வில் கட்டுரை வரைதல்

Sunday, 20 January 2019


நோக்கம்
கட்டுரை வரைவது ஒரு கலை. அது எழுதுபவரின் எழுத்து மூலமான வெளியீட்டு ஆற்றலின் அளவுகோல் எனலாம். அதனால் தான் இந்த அளவுக் கருவியை மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் குடிமைப்பணி ஆர்வலரின் எழுத்தாற்றலைச் சோதிக்கும் கருவியாக்கியுள்ளனர். தேர்வுக்குத் தயாரிக்கும் போது ஆழ்ந்தும், அகன்றும் கற்றவற்றைக் கோர்வைப்படுத்தி தர்க்க ரீதியாக எடுத்துரைக்கும் ஆற்றலுக்கும் மொழிப் புலமைக்கும் ஒருசேர்ந்த ஒரு சோதனையாகக் கட்டுரை கேள்விகள் இடம் பெறுகின்றன. கட்டுரை வரைதல் என்பது மாணவர்கள் சிறு வயது முதலே குறைந்தது இரு மொழிகளில் பள்ளிகளில் பயின்று பயன்படுத்திய ஒன்றுதான். எனினும் குடிமைப் பணித் தேர்வில் எழுதும் கட்டுரைகள் கல்வி நிறுவனங்களில் எழுதியவற்றை விட மாறுபட்டவை. இங்கே ஆர்வமாகப் படித்தல், தகவல் குறித்து அழுத்தமான நோக்கு ஆகியவற்றுடன் கருத்துக்களை விவரங்களை சுருக்கமாக, கோர்வையாக மூன்று மணி நேரம் எழுதும் திறன் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன.

பகுப்பாய்ந்து, ஆழமாகப் புரிந்துள்ளனரா என்பதை அறிவது இக்கட்டுரைத்தாளின் நோக்கம் போலத் தோன்றுகிறது. 1993-ம் ஆண்டு முதல்தான் குடிமைப் பணித் தேர்வுகளில் கட்டுரை வரைதல் இடம் பெறுகிறது.

எழுத்தாற்றல் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆதலால் சதிஷ் சந்திரி குழு கட்டுரையை ஆங்கிலம் தவிர அரசியல் சட்டத்தின் 8-வது பட்டியலில் இடம் பெறும் எந்த ஒரு மொழியிலும் எழுதலாம் எனப் பரிந்துரை செய்தது. பிரதான தேர்வை எழுத ஒருவர் தெரிந்தெடுக்கும் மொழியில் தான் கட்டுரைத் தாளையும் எழுத வேண்டும்.

இந்த கட்டுரை எழுதும் தேர்வுத் தாளுக்கு 200 மதிப்பெண் எனவும் வரையறை செய்யப்பட்டது. கட்டுரை எழுதுதல் தொடர்பாக மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013-ம் ஆண்டு முதல் அமல்படுத்தும் புதிய நெறிமுறைகள் இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விளக்குகிறது. 3 மணி நேரம் எழுத வேண்டிய இந்த கட்டுரை கேள்வியின் மதிப்பெண் 200- லிருந்து 250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுரைத் தேர்வின் விடைத்தாள்கள் ஒரே சீராக மதிப்பீடு செய்ய சில யோசனைகளை வழங்கி உள்ளது. அவை வருமாறு 1. பொருளைப் புரிந்து கொண்டமை 2. சொந்த சிந்தனை ஓட்டம் 3. தெளிவான கருத்து வெளியீடு (ஒருங்கிணைந்த சிந்தனையும் கருத்து ஒற்றுமையும், கண்டறிய கட்டுரையை இரண்டு தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வர். இவர்கள் இருவரும் அளித்த மதிப்பெண்களின் சராசரியே தேர்வரின் மதிப்பெண் ஆகக் கொள்ளப்படும்.)

திறம்மிக்க, தெளிவான சுருக்கமான கருத்து வெளியீட்டுக்கு நல்ல மதிப்பெண், மதிப்பீடு கட்டாயம் கிடைக்கும். விடைத்தாளில் ஒரு தலைப்பு பட்டியல் இடம் பெறும். இவற்றில் ஒன்றன் மீது கட்டுரை வரையவேண்டும். பட்டியலில் 6 முதல் 8 தலைப்புகள் வரை இடம்பெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பட்டியலில் 4 தலைப்புகளே இடம் பெறுகின்றன.

எனவே தலைப்பு எத்தனை என்பது குறிப்பிட இயலாது. எனினும், பொதுவான தேர்வுகள் செய்யுமளவு எண்ணிக்கையில் அவை இருக்கும் என நம்பலாம். கட்டுரை எழுதுவதற்கான சில பயனுள்ள குறிப்புகள் கவனமாக ஆராய்ந்த பிறகே எந்த தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

கட்டுரையில் இவ்வளவு வார்த்தைகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. கட்டுரையை பொதுவாக நான்கு பகுதிகளாக வகுத்துக் கொள்ளலாம்.

முகவுரை
வரலாறு
பொருளடக்கம்
முடிவுரை
முகவுரை என்பது மிகவும் முக்கியமானது. நல்ல தொடக்கமே பாதி முடிந்ததற்கு சமமாகும். இது கட்டுரை எழுதுவதற்கு மிகுந்த பொருத்தமானது என்றால் அது மிகையல்ல. கவனத்தை ஈர்க்கும் சவாலான தொடக்கங்கள் உரிய பலனைத் தரும். எனினும், கவனமுடன் கையாளப்பட வேண்டியவை. முகவுரையைத் தொடர்ந்து தலைப்பின் வரலாறும் அது சார்ந்த வளர்ச்சியும் இடம்பெற வேண்டும். இந்த வரலாற்றுப் பகுதி தேர்வாளரின் தலைப்பு பற்றிய ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவதுடன், அவர் இது பற்றிய ஒரு முடிவுக்கு வரக்கூடிய தகுதி பெற்றவர் என்பதை பறைசாற்றுவதாகவும் அமையும். கட்டுரையின் பிரதான பாகத்துக்கு வரும்போது ஒவ்வொரு பத்தியிலும் ஒரு முக்கியமான விஷயம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பத்தியில் இடம்பெற்ற விஷயம் வேறு ஒரு பத்தியில் மீண்டும் இடம் பெறாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு மீண்டும் மீண்டும் இடம் பெற்றால் கட்டுரையின் சுவாரசியத்தை அது குறைத்திடும். இடம் பெறும் முக்கிய விஷயங்களுக்கு இடையே தொடர்பு இணைப்புக்களைப் பராமரிக்க வேண்டும்.

வாக்கியங்கள் சிறியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் அதே நேரத்தில் குறைந்தபட்ச அளவிலேயே இணைப்புச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். கட்டுரையில் பிரச்சினைக்குரிய விஷயங்கள் எவை என்பதுடன், அவற்றிற்கான தீர்வுகளும் இடம்பெற வேண்டும். முகவுரையைப் போலவே முடிவுரையும் முக்கியமானது. முடிவுரையில் கட்டுரையின் முழு சாராம்சத்தையும் தெரிவிக்க வேண்டும். கட்டுரை என்கிற சிறகடித்த எண்ணப் பறவைகளை அழகாக, ஆணித்தரமாக, பத்திரமாக தரையிறங்கச் செய்வது முடிவுரையின் ஒரு நோக்கம் என்பதை மறக்க வேண்டாம். கருத்தாழமும் அவற்றின் கோர்வையான அமைவும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் மொழிநடைக்கும் உண்டு.

வார்த்தைத் தெளிவு, வாக்கிய நீளம் ஆகியவற்றுடன் சில சந்த அமைப்பு முறைகள் கொண்ட மொழிநடை சாலச் சிறந்தது. உரைநடைக்கு ஏன் எதுகையும், மோனையும் என்று எண்ணாமல் இவை இயல்பாக வந்து வாய்க்கும் வகையில் பயிற்சி பெற வேண்டும். பயிற்சி எல்லாத் தேர்வுகளையும் போல கட்டுரைத்தாள் தேர்வுக்கும் மிக அவசியமானது. எவை எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்க்கும் தலைப்புகளைத் தொகுத்து அவற்றில் ஏதாவது நான்கு அல்லது ஐந்து தலைப்புகளை குடவோலை முறையில் தேர்வு செய்து 3 மணிநேர மாதிரித் தேர்வு எழுதுவதே சிறந்த பயிற்சியாக அமையும். சொந்தமாகவோ, தெரிந்த பேராசிரியப் பெருமக்கள், பயிற்சியாளரிடமோ இவற்றை மதிப்பீடு செய்யலாம். நெறிமுறைகளின்படி இந்த மதிப்பீட்டைச் செய்து பார்த்து பயனடையலாம்.

கட்டுரை வகைகளும், தலைப்புகளும்
கட்டுரைகள் பொதுவாக கீழ்க்கண்ட வகைப்படுகின்றன:

விளக்கக் கட்டுரைகள்
இயம்பல் அல்லது வர்ணனைக் கட்டுரைகள்
சிந்தனைக் கட்டுரைகள்
விளக்கக் கட்டுரை என்பவை பொருள், இடம், அமைப்பு ஆகியன பற்றி விளக்கிக் கூறுவன.

வரலாற்று நிகழ்வுகள், சமுதாய, அறிவியல், தனிநபர் நிகழ்வுகள் ஆகியவற்றை கால வரையறையுடன் இயம்புவர், வர்ணிப்பது இரண்டாவது வகை கட்டுரை ஆகும். கருப்பொருட்கள், பிரச்சினைகள், நிகழ்வுகள் குறித்த கருத்துக்களைச் சோதிக்கவே சிந்தனைக் கட்டுரைகள் கேள்வித்தாளில் இடம் பெறுகின்றன. குடிமைப் பணித்தேர்வின் கட்டுரைத் தாளில் இடம் பெறுபவை இத்தகைய கட்டுரைத் தலைப்புகளே ஆகும். தனது சிந்தனைகளை அறிவார்த்தமாகப் பகுத்தாய்ந்து தெளிவாக எடுத்துரைக்கும் வாய்ப்புகளே இத்தலைப்புகள் எனலாம்.

கடந்த கால கட்டுரைத் தேர்வுத் தாள் அடிப்படையில் பார்த்தால் தலைப்புகள்
1அறிக்கை அடிப்படையிலும்
பிரச்சினைகள் அடிப்படையிலும்
பெரிய தலைவர்கள் சீர்திருத்தவாதிகளின் சிந்தனை அடிப்படையிலும் இருப்பதைக் காணலாம்.
இவற்றில் சில உதாரணங்களை இங்கு காண்போம்.

அடிப்படையிலான தலைப்புகள்: நன்னெறிகளின் அடிப்படை இரக்க உணர்வே (1993) இளமை தவறுக்கும், நடுவயது போராட்டத்துக்கும், முதுமை மன வருத்தத்திற்கும் ஆனவை (1994)
பயனில்லா வாழ்க்கை, இளவயது மரணம் (1994) நோக்கமில்லா அறிவுத்தேடலே உண்மையான நாகரிகத்தின் உயிர்நாடி (1995)
நமது செயல்கள் நம்மை நிர்ணயிக்கின்றன. நமது செயல்களை நாம் நிர்ணயிப்பது போலவே (1995) உண்மை வாழ்ந்து கற்பது, சொல்லிக் கொடுத்து கற்பதல்ல (1996) உண்மை சமயத்தை தவறாகப் பயன்படுத்துவது இயலாது. (1997) பெண்ணே இறைவனின் தலைசிறந்த படைப்பு (1998) மிகச் சிறந்தவற்றைத் தேடுதல்
(2002) நல்லதென்றும், தீயதென்றும் ஏதுமில்லை, நமது சிந்தனைதான் அவற்றை அவ்வாறு அமைக்கின்றன
சமீப காலமாக இத்தகைய தலைப்புகளில் கேள்விகள் கேட்பதில்லை. எனினும், கேட்கக் கூடாது என விதியும் இல்லை. ஆதலால் இவற்றுக்கும் தயாராகவே இருக்க வேண்டும்.

பிரச்சினை அடிப்படையிலான தலைப்புகள் : நாட்டிற்கு மேலும் சிறந்த பேரிடர் நிர்வாக அமைப்பின் தேவை (2000) ஆற்றல், அதிகாரமளித்தல் மட்டுமே நமது பெண்களுக்கு உதவ முடியாது (2001) இந்தியாவில் உயர்கல்வியை தனியார் மயமாக்கல் (2002) நவீன ஆதிக்கச் சக்திகளின் முகத்திரை (2003) சிறு தொழில்துறையில் உலக மயமாக்கலின் தாக்கம் (2006) பஞ்சாயத் ராஜ் (2007) உலக மயமாக்கலும், தேசிய மயமாக்கலும் (2009) படிங்குடியினப் பகுதிகளில் புதிய சுரங்கப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு (2010) சிறிய மாநிலங்களை உருவாக்குதல் (2011) தனியார் பொதுத்துறை இணைந்த பங்கேற்பு (2012) இந்தத் தலைப்புகளில் கட்டுரை எழுதுவதற்கு அவை குறித்த முழுமையான அறிவு முதல் முக்கியப்படி. அரை வேக்காட்டு அணுகுமுறை இத்தலைப்புகளுக்கு ஒவ்வாதவை. இவற்றில் உங்கள் கருத்து உறுதியுடன் ஏற்புடைய வகையில் இயம்பப்பட வேண்டும். பெரிய தேசியத் தலைவர்கள் சிந்தனை அடிப்படை தலைப்புகள் : காந்திஜி வலியுறுத்திய சுதந்திரம், சுய ராஜ்யம், தர்ம ராஜ்யம் ஆகியவை இன்று பொருத்தமானவையா? (2002) இது புதுமையான தலைப்புதான். எனினும், பொதுப்படிப்பும், தேர்வின் வரலாற்றுப் பாடத்தினைத் தயாரிக்கும்போது பெற்றஅறிவைக் கொண்டு இத்தலைப்பில் எழுத முடியும். இந்த மூன்று பிரிவுகளைத் தவிர வேறு வகையான, இந்த பிரிவுகளுக்கு இடைப்பட்ட வகையிலும் கட்டுரைத் தலைப்புகள் கேள்வித்-தாளில் இடம் பெறலாம்.

இத்தகைய தலைப்பு-களை “விளக்குக” வகை எனப் பாகுபடுத்திக் கொள்வோம். உதாரணத் தலைப்புகள் நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் (2000) சிறந்த உலகப் போர் எப்படி இருக்க வேண்டும் (2001) நவீன தொழில்நுட்பக் கல்வியும் மனிதப் பண்புகளும் (2002) குடிமைப்பணி அதிகாரி எப்படிச் செயல்பட வேண்டும் ? (1993) இந்திய &- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் (2006) சமுதாயத்தில் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் தாக்கம் (2007) பால்கன் மயமாக்கல் (2007) இந்திய சினிமா (2011) அறிவியலும், தர்க்கத் தத்துவமும் (2012) கட்டுரை விரிவாக்கத்துக்கு உதவும் குறிப்புகள் (உ&-ம்)

ஆலோசனைகள்
தலைப்பு தேர்வு செய்தல்

நீங்கள் தேர்வு செய்யும் தலைப்பு நீங்கள் படித்த பாடத்தினைச் சார்ந்ததாகவோ, அல்லது நீங்கள் ஆர்வம் கொண்டதாகவோ, அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருத்தல் நன்று.

தலைப்பைப் புரிந்துகொள்தல்

உளவியல் ரீதியாகப் பார்த்தால் தலைப்பில் நீங்கள் தயார் செய்த பகுதிதான் கேட்கப்பட்டுள்ளதாக நினைக்க வாய்ப்பு உள்ளது. இது தவறாக, எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தால் மதிப்பெண்கள் வராது. எனவே எச்சரிக்கையுடனும், திறந்த மனதுடனும் தலைப்பைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கருத்துக்களை முறைப்படி அமைத்து வழங்குதல்-முறைப்படி அமைப்பது என்றால் பொதுவிலிருந்து சிறப்புக்கு அல்லது சிறப்பிலிருந்து பொதுவுக்கு அல்லது காலக்கிரயமாக எனப் பொருள்படும்.

கட்டுரை பொருளடக்கம்

முகவுரை  : சுருக்கமாக கட்டுரையின் 1/10 பங்கு அளவில் இருக்க வேண்டும். படிப்போரை வயப்படுத்துவதாக அமைய வேண்டும்.
வரலாறு : தலைப்பின் வரலாறும் அது சார்ந்த காலக்கிரயமான வளர்ச்சியும் இடம்பெற வேண்டும். இது உங்கள் தயாரிப்பின் ஆழ, அகலங்களை தேர்வாளருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பு என்பதை மறக்க வேண்டாம்.
உள்ளுரை - சுமார் 4 பத்திகள் இருக்கலாம். ஆனால் பொருள் விளங்க விரிவாக அமைய வேண்டும். உதாரணங்கள், புள்ளி விவரங்கள் இடம் பெறலாம். காரண, காரிய விளக்கங்களும் இடம் பெற வேண்டும்.
முடிவுரை : சுருக்கமான திறம்பட்ட வகையில் அமைய வேண்டும். உங்கள் விவாதச் சுருக்கமாகவோ அல்லது கட்டுரை உச்சக் கட்டமாகவோ அமையலாம்.
கவனத்தில் கொள்க: தலைப்பை ஒட்டியே கட்டுரை எழுதல் வேண்டும். தலைப்பை மறுத்து கட்டுரை எழுதுதல் கூடாது. உதாரணத்துக்கு, “உயிரிச் சமநிலை பாதுகாப்பு என்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அல்ல” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து எழுதும் பொழுது, உயிரிச்சமநிலை பாதுகாப்பு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்ற வாதத்தைத் தப்பித்தவறிக்கூட வைக்கக்கூடாது.
அப்படிச் செய்தால் தலைப்பை நீங்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடும். தலைப்பைச் சரிவர புரிந்துகொள்ளாமல் எழுதி கட்டுரைத் தாளில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவர்களின் நிஜக்கதையும் உண்டு. கட்டுரை பத்தி பத்தியாகத் தான் எழுதப்பட வேண்டுமே அன்றி, தொடர்ச்சியாக எழுதக்கூடாது. கட்டுரையில் படம் வரைதலைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One