Search

சிவில் சர்வீஸஸ் பிரதான தேர்வை எதிர்கொள்ளும் முறைகள்

Sunday 20 January 2019



பொதுவாக உயரத்துக்கு கொண்டு செல்வது படிகள் எனும்போது உயர் பதவிகளுக்கு உயர்த்திச் செல்வது திட்டமிட்ட படிப்புகள் என்றால் அது மிகையல்ல. ஐ.ஏ.எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு திட்டமிட்ட படிப்புகளாக மட்டுமில்லாமல் திட்டம் போட்டு படித்த படிப்புகளாகவும் இருக்கவேண்டும். திட்டமிடுதலை காட்டிலும், திட்டம் போட்டுத்தான் தீர்க்கமான வெற்றியை பெறமுடியும் என்பது வரலாற்று காலங்களில் இருந்து இன்று வரை மறுக்க முடியாத ஒரு உண்மையாக இருந்து வருகிறது. பெரும் போர்கள், தேர்தல்கள், ஆட்சியமைப்புக்கு இப்படி எதுவாக இருந்தாலும் திட்டம் போட்டுத்தான் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானவர்களும் லட்சக்கணக்கானவர்களும் பங்கேற்கும் தேர்வுகளிலும் திட்டம் போட்டுதான், வெற்றிக்கு நமது விலாசத்தை காட்டவேண்டும்.

தேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம்
சிவில் சர்வீஸ் தேர்வுகளின் பூர்வாங்க (Preiminary Exam) தேர்வு முறையில் 2011ம் ஆண்டு யுபிஎஸ்இ மாற்றம் கொண்டு வந்தது. 2 தாள்களைக் கொண்ட இத்தேர்வு தலா 200 மதிப்பெண்கள் கொண்டதாக அமைந்தது. பொது அறிவுப் பாடத்தில் கேட்கப்படும் கேள்விகள் சற்று வித்தியாசமாகவும் அமைந்தது. அதுபோல விருப்பப்பாடம் நீக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 2வது தேர்வுத் தாள் முற்றிலும் மாற்றமுடையதாக அமைந்தது. மாணவர்கள் தாம் பயின்ற பாடங்கள் மூலம் பெறும் அறிவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை காட்டிலும், அவர்களின் அறிவுத்திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அரசு சார்பிலான கல்வி நிபுணர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்ததையடுத்து சிவில் சர்வீஸ் பூர்வாங்கத் தேர்வு முறையில் 2011ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டின் தேர்வு முறையில் ஒரு முழுமையான மாற்றத்தை பிரதான தேர்வில் (Main Exam) கொண்டு வந்துள்ளது. இதன்படி விருப்பப்பாடங்கள் இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தாளுக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் 600லிருந்து குறைந்து 500ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான தேர்வுகளில் உள்ள தேர்வுத்தாள்களும் அதன் மதிப்பெண்களும்
தகுதி தேர்வுக்காக மட்டும் ஒரு மாணவன் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இரண்டாவதாக பள்ளி தேர்வின் தகுதியில் அடிப்படையில் உள்ள ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். மேற்கண்ட இரண்டு தாள்களிலும் தலா 300 மதிப்பெண் மூலம் மொத்தமாக 600 மதிப்பெண் ஆகும். ஆனால் இந்த மதிப்பெண்கள் மொத்த தரவரிசை பட்டியலில் சேர்த்து கொள்ளப்பட மாட்டாது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2வது கட்டமாக நடைபெறும் பிரதான தேர்வில் கட்டுரை மதிப்பெண்கள் 200லிருந்து 250ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஅறிவு தாள்கள் 2லிருந்து 4ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்குரிய மதிப்பெண்கள் தாள் ஒன்றுக்கு 300 லிருந்து 250ஆக குறைக்கப்பட்டு மொத்தமாக 1000 மதிப்பெண்கள் பொதுஅறிவு தேர்விலிருந்தே கேட்கப்படவுள்ளது. பழைய முறையில் இருந்த 4 தாள்களை கொண்ட 2 விருப்பப்பாடங்கள் குறைக்கப்பட்டு ஒரு விருப்பப்பாடமாகவும், தாள் ஒன்றுக்கு 300 என்ற மதிப்பெண்கள் 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1200 மதிப்பெண்கள் கொண்ட விருப்பப்பாடம் தற்போது 500 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட முதன்மை தேர்வின் எழுத்து தேர்வு 7 தாள்களிலும் கிடைக்கும் மொத்தம் 1750 மதிப்பெண்கள் முன்னிலையில் வரும் மாணவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 3ம் மற்றும் இறுதிக்கட்டமாக தில்லியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் 275 மதிப்பெண்கள் வழங்கப்படும். இறுதி தரவரிசை பட்டியலில் எழுத்து தேர்வின் 1750 மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வின் 275 மதிப்பெண்களும் சேர்த்துக்கொள்ளப்படும். மொத்தமாக 2025 மதிப்பெண்களுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். முதன்மை தேர்வில் நடைபெறும் 7 தேர்வுத் தாள்களின் மொத்த மதிப்பெண்கள் 1750 ஆகும்.

தகுதித்தேர்வு தாள்கள்
தகுதித்தேர்வில் இரண்டு மொழிப் பாடங்களில் தேர்வு எழுத வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு மொழியிலும் ஆங்கிலத்திலும் தேர்வுகள் நடைபெறும். பத்தாம் வகுப்பு பாடநிலையில் கேள்விகள் கேட்கப்படும். தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்பதாரரின் அடிப்படை மொழி அறிவை சோதித்துப் பார்க்கவே இந்த இரு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த 2 தாள்களிலும் 300 மதிப்பெண்கள் வரிசை எண் வழங்கப்படும். ஆனால் இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படமாட்டாது. இந்த 2 தாள்களிலும் தேர்ச்சி பெறாவிட்டால் இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. அதற்காக இத்தாள்கள் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனெனில் புதிய தேர்வு முறையில் இவ்வளவு மாற்றம் கொண்டு வந்த மத்திய தேர்வாணையம் இதிலும் ஏதேனும் பொடி வைத்தாலும் வைக்கலாம் எனவே இரண்டு தாள்களையும் கவனத்துடன் எழுத வேண்டும் என்பது அவசியமாகிறது. மேலும் நிறைய இளைஞர்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்த தாள்களில் தகுதிக்கு எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதுதான். உண்மையை சொல்லப்போனால் அந்த தகுதி எவ்வளவு என்பதையும் மத்திய தேர்வாணையமே முடிவு செய்கிறது.

கட்டுரை
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கட்டுரை 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கணிதம் மற்றும் பொறியியல் படிப்பை சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அள்ளுவதும். பொறியியல் அல்லாத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும் பல ஆண்டுகள் இருந்து வந்தது. எல்லா மாணவர்களுக்கும் அதாவது பொறியியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல் என்ற அனைத்து தரப்பு மாணவர்களையும் ஒரே தட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக புகுத்தப்பட்டதே கட்டுரையாகும். கடந்த ஆண்டு வரை 200 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வுத்தாளுக்கு புதிய திட்டத்தின்படி 250 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வாளர்கள் கட்டுரைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு கட்டுரை என்னென்ன அம்சங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு சில வரையறைகள் உள்ளன. இதன்மூலம் ஒரு மாணவனின் எண்ணங்கள், அவற்றின் வெளிப்பாடு தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை கோர்வையாக்கும் திறன், வாதங்களுக்கு வலிமை சேர்க்கும் பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுரைகள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவை இந்த நூற்றாண்டில் முன்னெடுத்து செல்ல விரும்பும் இளைய அதிகாரிகளின் மன எழுச்சியையும் மனோபாவத்தையும் இந்த கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எனவே, கட்டுரைகள் கட்டுக்கோப்பாகவும். ஒரு கறார் களஞ்சியமாகவும் அமைய வேண்டும் என தேர்வாணையம் எதிர்பார்க்கும் என்பதை போட்டித் தேர்வர்கள் மறக்கக்கூடாது.

பொது அறிவு தேர்வுகள்
இரண்டு தாள்களை மட்டுமே கொண்டிருந்த பொது அறிவு தாள்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டு மதிப்பெண்களும் 600 லிருந்து 1000மாக மாற்றப்பட்டுள்ளது. இதிலிருந்து தேர்வாணையம் பொது அறிவிற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாகும். பொது அறிவு தாள்களை எதிர்கொள்வதற்காக தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சொல்லத் தேவையில்லை. இது மட்டுமல்லாது பழைய பாணியில் கேட்கப்பட்ட பாடத்திட்டம் அப்படியே இருந்தாலும் அதற்கு மேலாக புதியதாக சில சமகால பிரச்சினைகளையும் சவால்களையும் இத்தேர்வில் உள்ளடக்கி கொள்வது என்பது முக்கியமான அம்சமாகும். மொத்தத்தில் பொதுஅறிவு தாளில் தரம் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

பொது அறிவு தாள் 1
இத்தாள் இந்திய வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், உலக புவியியல் மற்றும் சமுதாயம் பற்றிய அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கியதாகும். வரலாற்று தலைப்பில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியவை புத்தம்புதிதாகும். சுதந்திர இந்தியா வரலாறும் முக்கியத்துவம் பெறுகிறது. உலக புவியியலும், புவியியல் தலைப்புகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன. இதில் சமுதாயம் மற்றும் சமுதாய பிரச்சினைகள் என்பது சமகால தலைப்புகளாகும்.

இத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள சில தலைப்புகள் ஏற்கனவே இருந்தாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாகங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும். மேற்கண்ட அனைத்து தலைப்புகள் பற்றி புத்தகங்களில் படித்தாலும் அது விஷயமாக சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றியும் போட்டி தேர்வர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை தேர்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொது அறிவு தாள் 2
இத்தாளில் அரசு, அரசியலமைப்பு, அரசியல். சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு வரை இந்திய அரசியல் இந்த பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தாலும், சமகால நிகழ்வுகள் பற்றியே அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டது என்பது நிதர்சனம். மேலும் இந்த புதிய தேர்வு முறையில் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள சமூகநீதி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தரமான செய்தித்தாள்களை அன்றாடம் படித்து வந்தால் மட்டுமே முழுமையாக பதில் எழுத முடியும்.

மேலும் அரசு இயங்கும் விதம், நிறுவனங்கள் பற்றிய தலைப்புகள் போன்றவை பாடத்திட்டத்தில் இருந்தாலும், அதைபற்றிய மேலோட்டமான கருத்துக்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே தெரிந்துகொண்டால் மதிப்பெண் பெறுவது கடினமாகும். இங்கு தேர்வாளர் எதிர்பார்ப்பது மாணவனின் போட்டியாளரின் திறமை மற்றும் அவரது புரிந்துகொள்ளும் தன்மை என்றால் அது மிகையல்ல.

பொது அறிவு தாள் 3
இத்தாள் தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை போன்றவற்றை கொண்டதாகும். பொருளாதாரம் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தினமும் ஒரு மாற்றம் என்ற வகையில், பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் உள்ள நம்நாட்டில் எத்தகைய அறிவு நுட்பம் வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனவே, கடந்த கால பொருளாதார நிலைமை, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை பற்றிய செய்திகளை அவ்வப்போது போட்டித் தேர்வுக்கு என்று வெளியிடப்படும் மாதாந்திர சஞ்சிகைகளை படிப்பதன் மூலமாகவோ பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்களை கொண்ட தினசரிகள் மூலமாகவோ அறிவுநுட்பத்தை வளர்த்துக்கொள்ளலாம். விவசாயம், உணவு சம்பந்தப்பட்ட தகவல்கள் மிக முக்கியமானதாகும். எனவே, இதில் ஏற்படும் மாற்றங்கள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாட்டின் பாதுகாப்பு பற்றியும் அறியவேண்டியது முக்கியமாகும். இதில் குறிப்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளவேண்டியது தேவையாகும். அறிவியலின் ஆக்கமுறைகள் ஜெட் வேகத்தில் செல்வதால் அதில் ஏற்படும் நன்மை, தீமைகளின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று யாராலும் கணிக்கமுடியாத ஒரு சூழ் நிலையில், நாட்டையே நிர்வாகம் செய்யப்போகும் இளைய தலைமுறையினர் அதை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வாளர்கள் சுற்றுச்சூழல் பகுதியையும் புகுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் ஒரு சிறு பகுதியாக கடந்த தேர்வுகளில் இருந்தாலும். 2011 பூர்வாங்கத்தேர்வில் மாற்றம் கொண்டு வந்ததிலிருந்து இன்றைய 2013 புதுப்பாடத்திட்டம் வரை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் முக்கியமாக பல்லுயிர் பெருக்கம், பேரழிவு மேலாண்மை முக்கியமான இடத்தை வகிக்கிறது. மாணவர்கள் இந்த தலைப்புகளில் முக்கியமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள், சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

பொது அறிவு தாள் 4
இத்தாள், நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் மனோபாவம் சம்பந்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்முறையாக இந்த பகுதி சேர்க்கப்பட்டிருப்பது மிக முக்கியமாகும். காரணம், வளர்ந்து வரும் சமுதாயம், ஊழல், ஒற்றுமையின்மை, மாறுபட்ட மனப்பான்மை போன்ற பல பிரச்சினைகளால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை கொண்ட இந்தியா, அந்த இளைஞர்கள் வருங்காலத்தை சந்திப்பதற்கு ஏற்றபடி அவர்களை எப்படி வடிவமைப்பது என்பதற்காக இப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் அல்லாது அரசின் பார்வையில் பொது வாழ்வு நெறிமுறைகள் பற்றி பலமுறை பேச்சுக்கள் நடந்தாலும் அதனை வழிமுறைப்படுத்த இம்மாதிரி தேர்வுகள்தான் சரி என்று நினைத்து தேர்வாளர்கள் இந்த பகுதியை சேர்த்துள்ளனர்.

புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் உளவியல் மனப்பான்மை மற்றும் மதிப்புமுறை தேர்வுகள் நாட்டை ஆள்வதற்குரிய சிறந்த இளைஞர்களை உருவாக்குவது மட்டுமல்லாது அதே இளைஞர்கள் ஒருமைப்பாட்டிலும் நெறிமுறைகளிலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் வழிவகை செய்கிறது. அதுதவிர. தகுதியானவர்கள் தகுதியான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

இதுதவிர, மாணவர்கள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் திறந்தவெளி சந்தைமயமாக்கல் என்ற சூழலிலும் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையில் நிர்வாகம் செய்ய வரும்போது அவர்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர, ஒழுங்கு முறைபடுத்துபவராக இருக்கக்கூடாது என்பதும் தேர்வாளர்களின் கருத்தாகும்.

உலகமயமாக்கல்
மாறுபட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களையும் சமுதாயத்தையும் கொண்டுள்ள நமது நாட்டில் இளைஞர்கள் முன்நின்று நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் தேர்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்வுக்கு தயார்செய்யும் இளைஞர்களை நேரடி கேள்விகளை மட்டுமல்லாது இடம், பொருள் அறிந்து சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவையும் நிச்சயம் சோதிக்கவிருக்கிறார்கள். எனவே, இந்த தாளில் மட்டும் ஒருவர் தன்னுடைய ஏட்டுக்கல்வி அல்லாது திறன் அறிதல், ஒரு விஷயத்தை அணுகுமுறை செய்வது, பொதுவாழ்வில் தூய்மை, சமூகம் சந்திக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகாணுதல் போன்ற பலவிதமான கோணங்களில் தங்களை தயார் செய்துகொள்வது அவசியம். எனவே, இந்த தேர்வு மூலம் தனிமனிதனின் திறமை மட்டுமல்லாது, அவருடைய அணுகுமுறை, தலைமையேற்கும் பண்பு, பிரச்சினைகளை அறிந்து முடிவெடுக்கும் திறமை, பிரச்சினைகளை கையாளும் தன்மை, ஈடுபாடு, உணர்ச்சிவயப் படாமை, தகவல்தொடர்பு திறன், நன்னெறிகள், நிர்வாக ரீதியிலான நிலைப்பாடு குறிப்பிட்ட காலத்தில் முடிவெடுக்கும் தன்மை உள்ளிட்ட பல பரிமாணங்கள், பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன என கொள்ளலாம்.

மேற்கண்ட நான்கு பொது அறிவு தாள்களும், எளிதில் பதில் அளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், ஒரு மாணவன் எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்வதோடு, அந்த கேள்வி அல்லது பிரச்சினை பற்றிய முழுவிவரம், காரணம், எதற்கு, ஏன், எப்படி என்று பலவித கோணங்களில் ஆராய்ந்து பார்க்கும் தன்மை மட்டுமல்லாது, கேள்விக்கு தகுந்த பதிலை அளவோடும், அர்த்தத்தோடும் அளிக்க வேண்டியது அவசியம்.

விருப்பப்பாடம்
கீழ்கண்ட பாடங்களில் ஒன்றை பிரதான தேர்வில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வேளாண்மை, கால் நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல், மானுடவியல், தாவரவியல், வேதியியல், சிவில் பொறியியல், வணிகவியல், மற்றும் கணக்கு பதிவியல், மின்பொறியியல், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், நிர்வாகம், கணிதம், மெக்கானிக்கல், இன்ஜினியரிங், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல், அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், பொது நிர்வாகம், சமூகவியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல். இலக்கியங்கள் அரபிக், அஸ்லாமி, பெங்காலி, சைனிஸ், ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மராத்தி, மணிப்பூரி, நேப்பாளி, ஒரிஸா, பாலி, பெர்ஷியின், பஞ்சாபி, ருஷ்யன், சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தில் விருப்பப்பாடம் இரண்டிலிருந்து, ஒன்றாக குறைக்கப்பட்டதோடு, மதிப்பெண்களும் 1200 யிலிருந்து. 500ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதிலும், ஒரு தாளுக்கு 250 மதிப்பெண்கள் விகிதம், இரண்டு தாள்கள் உள்ளன. விருப்பப் பாடத்திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், தேர்வாளர்கள் ஒரு மாணவன் படித்த பாடத்தை விட, அல்லது இரண்டு பாடங்கள் படித்து பெறும் மதிப்பெண்களை விட எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வகையில் உள்ள பொது அறிவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகும். தற்போது விருப்பப்பாடம் எடுப்பதில் அதிக பிரச்சினைகள் வராது. ஏனெனில், ஒரு மாணவனோ, மாணவியோ கல்லூரியில் தாங்கள் படித்த ஒரு பாடத்தை (விருப்பப்பாடத்தில் அங்க மாக இருந்தால்) எளிதில் தேர்ந்தெடுத்து படித்து, இத்தேர்வை எழுதலாம். சில நேரம் மாணவர்கள் பட்டப்படிப்பில் படித்த பாடம் பிடிக்காமலோ அல்லது அப்பாடம் விருப்பப்பாட தொகுதியில் இல்லாமலோ இருந்தால் அவர்கள் புதியதாக ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது அவசியமாகிறது. விருப்பப்பாடத் தேர்வில் முந்தைய அளவுக்கு கவனம் தேவையில்லை என்றாலும், இந்த பாடத்திற்கான 500 மதிப்பெண்கள் நிச்சயம் மொத்த தரவரிசை பட்டியலில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது உண்மை. எனவே. மாணவர்கள் தாங்கள் படித்த பாடமாக இருந்தாலும் அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்போகும் பாடமாக இருந்தாலும், அப்பாடம் பொது அறிவுத் தாள்களில் பயன்படுமா என்பதை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வெண்டும். பொது நிர்வாகம், அரசியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச உறவுகள், புவியியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், விவசாயம் மற்றும் பொருளாதாரம் போன்ற பாடங்கள் ஏதாவது ஒரு விதத்தில் மாணவர்களுக்கு பொது அறிவுத்தேர்வில் உதவும். ஆனால், இப்பாடங்கள் மட்டுமல்லாது அனைத்து விருப்பப்பாடங்களில் இருந்தும் சிறு பகுதியாவது பொது அறிவுத்தாள்களில் இடம்பெறும் அளவிற்கு தேர்வாளர்கள் தற்போது பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

சாதாரணமாக, புதிதாக வரும் மாணவன் விருப்பப்பாடம் தெரிவு செய்யும்போது. ஏற்கனவே இத்தேர்வில் வெற்றிகண்டவர்கள், நகர்ப்பகுதிகளில் உள்ள பயிற்சி வகுப்புகள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் தேர்வை பற்றியும், எழுதும் முறை பற்றியும் அறிந்துகொள்வர். அதேநேரம், விருப்பப்பாடங்கள் ஒன்றொடொன்று சேர்த்து தேர்வில் வரும் என்ற அச்சம் இனி கொள்ளத் தேவையில்லை. அதற்கும் மேலாக எந்த விருப்பப் பாடம் அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும். எது குறைவாக இருக்கும் என்று இந்த புதிய சூழ்நிலையில் எடுத்துரைப்பது என்பது கடினமான விஷயமாகும். எனவே, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்கள் மற்றும் தங்களுக்கு எப்படி மற்ற தேர்வில் உதவும் என்பதை பற்றியும் அறிந்து கொண்டு, தங்களுடைய விருப்பப்பாடத்தை தேர்வு செய்வது அவசியமாகிறது.

இந்த நிலையில், மற்றுமொரு பிரச்சினை சிலருக்கு வரலாம். அதாவது கடந்த சில ஆண்டுகளாக இரண்டு விருப்பப்பாடங்களை தெரிவு செய்து படித்து வந்தவர்கள் எதை விடுவது. எதை எடுப்பது என்ற ஒரு குழப்பத்திற்கு உள்ளாகலாம். அவர்களும் எந்தவொரு பாடத்தில் அவர்கள் நம்பிக்கை அதிகமாக உள்ளதோ, அந்த ஒரு பாடத்தையே தெரிவு செய்ய வேண்டும். மேலும், செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து ஒரு பயிற்சி வகுப்பில் சேர்வது தவறான முடிவாகும். எனவே, தீர ஆராய்ந்து அந்த பயிற்சி வகுப்புகளின் உண்மையான சாதனைகள், அங்கு படித்து வெற்றிபெற்ற மாணவர்களின் தகவல்கள் மற்றும் அங்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் போன்ற காரணிகளை பொறுத்தே ஒருவர் பயிற்சி வகுப்பில் சேருவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். சாதகங்களையும் சாதகங்கள் அல்லனவற்றையும் கணக்கில் வைத்து, முடிவு எடுப்பது இன்னும் சிறப்பான செயலாகும்.

தேர்வுக்கு தயார் செய்வது எப்படி?
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் பெரிய ஒரு சந்தேகம் எத்தனை மணிநேரம் படிப்பது, எவ்வளவு படிப்பது, என்பதுதான். விண்ணப்பதாரர் ஒரு நாளைக்கு 10லிருந்து 12 மணி நேரம் படிக்கலாம். சிலர் 18விருந்து 20 மணி நேரம் படிப்பதாக கூறுவார்கள். இது சாத்தியமானது அல்ல. தம்மிடம் எவ்வளவு திறமை உள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஒரு கால அட்டவணையை வகுத்து. அதன்படி படித்து தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதாகும். தேர்வுகள் சமயத்தின்போது சரி விகிதத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது நல்ல உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். உடலும், உள்ளமும் ஒய்வு எடுக்கும் வகையில் போதுமான அளவுக்கு தூங்க வேண்டும் என்பது ஒரு கட்டாய தேவையாகும். தூங்கி எழுந்தபிறகு உடலும், புத்துணர்ச்சியோடு இருக்கும்போது படித்தல் மிகவும் நல்லது. அப்படி செய்வதால் படித்தவற்றை எளிதில் கிரகித்து மனதில் நிறுத்திக்கொள்ள முடியும். படித்த பாடங்களை மீண்டும் திரும்பப் படிக்கும்போது முக்கியமான குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவது முறை படிக்கும்போது தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு படிக்க வேண்டியதை பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுவதுமாக படிக்க வேண்டும். இது பொது அறிவு என்ற அடித்தளத்தை வலுவாக அமைத்திட உதவும்.

தற்போது கேட்கப்படும் பொது அறிவு கேள்விகள் எல்லாம், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும் என்பதால், ஆழ்ந்து படித்தவர்கள் மட்டுமே பதிலுரைக்க முடியும் என்ற நிலை தற்போது சூழ்ந்து இருப்பதால், எப்படி கேட்டாலும் பதில் அளிக்கக்கூடிய வகையில், படித்து தெளிவு பெறும் சூழலுக்கு வந்துவிட வேண்டும். அகில இந்திய வானொலியின் காலை, மாலை செய்தி அறிக்கைகளை கேட்பது மிக மிக அவசியம். இந்த செய்தி அறிக்கைகள் தேசிய மற்றும் உலக அளவிலான அன்றாட நிகழ்வுகளை அறிவு பெட்டகத்தில் கொண்டு சேர்க்கும். ஏனெனில், அகில இந்திய வானொலியின் தில்லியிலிருந்து ஒலிபரப்பப்படும் இரவு செய்திகள், அதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்கள், ஆகியவற்றை மையப்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஒருவர் அகில இந்திய வானொலி செய்தியை முதல் நாள் இரவு கேட்டு தெரிந்தபின்பு, அதே நிகழ்வை, அதே செய்தியை மீண்டும் மறுநாள் செய்தித்தாள்களில் படிப்பதோடு, இன்னும் சில காலம் கழித்து போட்டித் தேர்வுகளுக்கு என்று வெளியிடப்படும் மாதாந்திர சஞ்சிகைகள் மூலமாக, அதே நிகழ்ச்சியை படிக்கும்போது அது ஞாபகத்தில் பளிச்சிடும். நிகழ்வுகள் குறித்த தகவல் களஞ்சியத்திற்கு நம்மை நாள்தோறும் நகர்த்திச் செல்லும் நாளேடுகள், சஞ்சிகைகள், பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிடும் செய்திகள் ஆகியவற்றை நன்கு தயார் செய்து கொள்ளவேண்டும். ஊடகங்களோடு உலா சென்றால் பொது அறிவுத்தாள்கள் அனைத்தையும் சந்திப்பது மிகவும் எளிய செயலாகும். மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் புத்தக வெளியீட்டுப்பிரிவு வெளியிடும்.

இந்தியா இயர்புக், யோஜனா, குருக்க்ஷேத்திரா ஆகியவற்றையும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகங்கள் இந்தியா பற்றிய அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள உதவிடும்.

தேர்வை சந்திப்பது எப்படி?
ஒரு கேள்விக்கு எத்தனை வார்த்தைகளில் பதில் எழுத வேண்டும் என கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவ்வாறே பதில் அமைந்திட வேண்டும். குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மேல் அதிகமாக எழுதினால் மதிப்பெண்களை கூடுதலாக பெற்றுவிட முடியாது. எழுதும் நேரமும் விரயமாகிவிடும். ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை எழுதிவிட்டு வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. சரியான முயற்சியில் பயிற்சி மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இடம்பெறும். ஒரு பக்கத்திற்கு எத்தனை வரிகள் பிடிக்கும் என்பதை எளிதாகக் கணக்கிட்டு, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்ப பதில் எழுத முடியும். மதிப்பீடு செய்பவர் எளிதில் படித்துப் பார்க்கும் வகையில் பதில்கள் தெளிவாக இருக்க வேண்டும். முக்கியமான பதில்களை அடிக்கோடிட்டுக் காட்டுவது நல்லது. கட்டுரை என்றால் ஒவ்வொரு பத்தியாக எழுத வேண்டும். ஒவ்வொரு பத்தியும் ஒரு புதிய பதிலுடன் தொடங்கப்பட வேண்டும். ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். எழுதும் எழுத்துக்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே சீராக இருக்கவேண்டும். சிலர் துவக்கத்தில் நன்றாக எழுதிவிட்டு பின்னர் நேரம் ஆகிவிட்டதே என்ற நெருக்குதலுக்கு உள்ளாகி அவசர கதியில் எழுதும்போது எழுத்துக்கள் கிறுக்கலாகி மோசமாகிவிடும். மோசமான கையெழுத்து, மதிப்பீட்டாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடும். அடுத்தவர் எரிச்சல் ஆகாது என்பது போல, மதிப்பீட்டாளர் எரிச்சல் பட்டால், விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் கரைந்து போகும். ஒவ்வொரு மாணவனும் ஒரு மதிப்பீட்டாளராக தம்மை பாவித்துக் கொண்டால் இதை உணர முடியும்.

நேர்முகத்தேர்வு
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் நேர்முகத்தேர்வு பற்றிய ஒரு அச்சம் நிச்சயம் உண்டு. அதிலும், பிராந்திய மொழிகளில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ஆங்கிலப்பாடத்தை கல்லூரியில் படித்துவிட்டு, ஆங்கிலத்தில் பேசுவதற்கே யோசனை செய்யும் அவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய தேர்வில் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்று நினைக்கலாம். அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளத்தேவையில்லை. சாதாரணமாக, தாங்கள் படிக்கும் காலத்திலிருந்து இதுவரை என்னென்ன அனுபவம் கண்டார்களோ, அதுபற்றியும் அவர்கள் ஊர், மாவட்டம் மற்றும் மாநிலம் சம்பந்தப்பட்ட கேள்விகளே அதிகமாக கேட்கப்படும். பொது அறிவும், அதை பற்றிய பதிலும் ஒரே நாளில் வளர்ந்து விடாது. மழை துளி போல சிறுகச்சிறுக பெருகி வெள்ளமாக உருவாவதுதான் ஒரு மனிதனின் மொத்தப்பொது அறிவு. அதுமட்டுமல்ல மாணவர்கள் நேர்முகம் என்றால், அது கேள்வி, பதில் என்றே நினைக்கலாம். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுகளின் நேர்முகம் என்பது, முழுமையான தன்னைப்பற்றி நேர்முகத் தேர்வு குழுவினரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாகும். எனவே, எது தெரிகிறதோ அதை அச்சமில்லாமல், நேரடியாக பதில் சொல்லலாம். தவறாக சொல்லி விட்டோமோ என்று கவலை கொள்ளத்தேவையில்லை. தேர்வுக்குழுவினர் எதிர்பார்ப்பது உண்மையைத்தான். தெரியாது என்ற உண்மையைத்தான், மழுப்பல் அல்ல. மழுப்பல் பதிலை தேர்வுக் குழுவினர் அறவே வெறுப்பார்கள் என்பது உண்மை. நேர்முகத்தேர்வில் தர்க்கம் செய்வது அவசியம் அற்றது. சில நேரம் தர்க்கம் செய்ய நேர்ந்தால் நியாயப்படுத்தப்படும் பதில் புறந்தள்ள முடியாதவாறு அமையவேண்டும். ஆகவே, தெரிந்த விஷயத்தை தெளிவாகவும், அமைதியாகயும் எடுத்துரைப்பதன் மூலம் தேர்வுக்குழுவினரை நம் வசப்படுத்த முடியும். குளங்கள், கிணறுகள், கண்மாய்கள் போன்றவை ஒரே நாளில் மழையில் நிரம்பக் கூடும். ஆனால் மிகப்பெரிய அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து பெய்யும் மழையால் படிப்படியாகத்தான் உயரும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One